Wednesday, January 7, 2026 12:01 pm
முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சாரக் கொள்கையின் படி அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீதி விளக்குகளுக்கான மின்சாரக் கட்டணத்தை அந்தப் பகுதி மக்களிடமே அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பில் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க கருத்துத் தெரிவிக்கையில்,
குறிப்பிட்ட பகுதியில் பயன்படுத்தப்படும் வீதி விளக்குகளின் மொத்த வோட் அளவைக் கணக்கிட்டு அதனை அப்பகுதியில் வாழும் மக்களிடையே பகிர்ந்து மின்சாரப் பட்டியலுடன் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது வீதி விளக்குகளைப் பராமரிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களிடம் (பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள்) உள்ள நிலையில் புதிய யோசனையின்படி இந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து நீக்கி, இதற்காக தனியானதொரு நிறுவனத்தை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொது வீதி விளக்கு பராமரிப்புப் பணிகளைப் புதிய கட்டமைப்புக்கு மாற்றுவதன் மூலம் நடைமுறை மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

