Monday, January 12, 2026 1:30 pm
இலங்கையின் தற்போதைய கல்விச் செய்திகள் மற்றும் கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கைத் தமிழரசுச் கட்சி சார்பில் சிவஞானம் ஸ்ரீதரன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமருக்கு எதிராகக் கையெழுத்துக்களைத் திரட்டி, அவர் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் பதவிகளிலிருந்து விலக வேண்டும் என நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஹரிணி அமரசூரிய ஒரு பெண் பிரதமர் என்பதாலும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித முறையான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதாலும், தமிழரசுச் கட்சி இந்த நடவடிக்கையில் பங்கெடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானமானது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கை எனத் தாங்கள் கருதுவதாகவும், இவ்வாறான அவதூறான செயற்பாடுகளை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.
கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போதும், கட்சித் தலைமையுடனும் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும், முறையான ஆதாரங்கள் இன்றி பிரதமருக்கு எதிராக வாக்களிப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இந்த புதிய கல்வி முறையானது நாட்டுக்கு மிக முக்கியமானது என்றும், இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இராணுவ மயப்படுத்தப்பட்ட அல்லது போதிய அறிவற்றவர்களால் கல்வித்துறை கையாளப்படுவதைக் காட்டிலும், முறையான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
கடந்த வியாழக்கிழமை பிரதமரைச் சந்தித்த போது தமிழர்களின் பூர்வீக வரலாறு மற்றும் கல்வித் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக ஸ்ரீதரன் தெரிவித்தார். குளக்கோட்டன், சங்கிலியன், பண்டாரவன்னியன் மற்றும் அரசகேசரி போன்ற தமிழ் மன்னர்கள் இந்த நிலத்தை ஆண்ட வரலாறுகள் திட்டமிட்ட முறையில் பாடப்புத்தகங்களிலிருந்து மறைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 70-களுக்குப் பின்னர் வந்த அரசாங்கங்கள் எவ்வித திட்டமுமின்றி தமிழ் மக்களின் வரலாற்றைச் சிதைத்துள்ள நிலையில், அவற்றை மீண்டும் பாடப்புத்தகங்களில் உள்வாங்குவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் கல்வித் தேவைகள், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைக் கட்டமைப்பு வசதிகள் எனப் பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில், பிரதமருக்கு எதிரான தனிப்பட்ட அல்லது அரசியல் ரீதியான தாக்குதல்களில் தமிழரசுச் கட்சி பங்காளியாகாது என அவர் தெளிவுபடுத்தினார்.
அரசாங்கத்தின் மீது தமக்கு விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு பொறுப்புள்ள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற ரீதியிலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சி என்ற ரீதியிலும், இந்த விவகாரத்தில் மிகவும் நிதானமாகச் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

