Wednesday, April 8, 2026 2:19 pm
புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் இந்த நவீன மயமாக்கல் செயன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட வசதிகளில் தரைத்தளம் பேருந்து நிறுத்துமிடமாகவும் இரண்டாம் தளம் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்விடங்களாகவும் மூன்றாம் தளம் நிர்வாக மற்றும் செயல்பாட்டுச் சேவைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்புனரமைப்புப் பணிகள் சுமார் 585 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விமானப்படையினரின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் பல நிறுவனங்களின் பங்களிப்போடு இப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
பயணிகளின் வசதிக்காக பஸ்கள் புறப்படும் நேரம் மற்றும் சென்றடையும் நேரம் ஆகிய தகவல்கள் டிஜிட்டல் திரைகளில் காட்சிப்படுத்தப்படும். பஸ் சேவைகள் மட்டுமன்றி புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் குறித்த விரிவான தகவல்களையும் பயணிகள் இங்கிருந்தே அறிந்துகொள்ள முடியும்.

கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் நேரடி மேற்பார்வையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


