Friday, November 28, 2025 10:31 am
இலங்கைத்தீவைச் சுற்றி உருவாகியுள்ள டித்வா ‘Ditwah’ சூறாவளிப் புயல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மோசமான சூழ்நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் அதிகபட்ச மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் சில மாகாணங்களில் 200 மில்லிமீற்றரையும் தாண்டி மிக கன மழை பெய்யும் எனவும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட வேகத்தில் பலத்த காற்றும் சில மாகாணங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்றடிக்கும் அபாயம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் பிரதேசத்தில் 305 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், மூன்றாவது அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் உள்ள கண்டியில் பதிவாகியுள்ளது, அதன் அளவு 223.9 மி.மீ ஆக உள்ளது.
இதன்படி, இலங்கையில் நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழையும், திருகோணமலை, பதுளை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து அதிகாரிகள் வழங்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும், வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

