Wednesday, January 21, 2026 11:20 am
ரஷ்யாவை உறைய வைக்கும் அளவிற்கான கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு பின் இவ்வாறான பனிப்பொழிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ரஷ்யாவில் வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் தலைநகர் மொஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் பனிப்பொழிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பனிக் குவியல்கள் 10 முதல் 40 அடி உயரம் வரை உயர்ந்துள்ளன. உயரமுள்ள கட்டிடங்கள் கூட பனிக்குள் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சார தடை, போக்குவரத்து முடக்கம், விமானச் சேவைகள் ரத்து போன்றவற்றால் அந்தத் தீபகற்பமே தனித்துவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் பனிப்பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு அவசர கால நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

