யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனையின் ஒரு பகுதி கடந்த மாதம் இடிந்து விழுந்தது. கடும் மழையினால் பாரம்பரிய பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததால் பலரும் விசனம் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மீள புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன. நேற்று வியாழக்கிழமையும் இப் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன தொடர்ந்தும் புனரமைப்பு பணிகள் நடைபெறும் என யாழ் மாநகர சபை கூறியுள்ளது.
இந்த மந்திரிமனை தனியாா் காணியில் அமைந்துள்ளதால் தொல்பொருள் திணைக்களம் அதனை பராமரிக்க முடியவில்லை என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.
ஆனாலும் மரபுரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் குறித்த காணி உரிமையாளரின் சம்மதத்துடன் தொல்பொருள் திணைக்களத்தினால் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் பிரகாரம், மந்திரி மனையின் முன்னரங்க பகுதியில் காணப்படும் மரத்தினால் ஆக்கப்பட்ட நிலைகள் மற்றும் கூரைகளை அடையாளப்படுத்தி அகற்றி பாதுகாக்கப்படுகின்றது.
இதன் மூலம் மந்திரி மனையின் ஏனைய பகுதிகள் மழை காலத்தில் இடிந்து விழுவதைத் தடுக்க முடியும் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறு அடையாளப்படுத்தி அகற்றப்பட்ட பொருட்கள் மழைகாலம் முடிவடைந்த பின்னர் மீண்டும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

