ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளையும் இணைக்கவுள்ள பிரதான கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான கட்டமைப்பு அறிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை இரண்டு பேரிடமும் கையளிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் நேற்றைய தினம் (புதன்கிழமை) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ரணில் – சஜித் இருவரையும் இணைத்து செயற்படுத்தவுள்ள கட்டமைப்பின் தலைவரான கபீர் காசிம், குறித்த அறிக்கை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும் இறுதிக் கட்ட செயற்பாடுகள் முடிவடைந்துள்ளது எனவும் விபரித்தார்.
இந்த அறிக்கை தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த அறிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது, தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவது, ஒரே கொள்கை, ஒரே சித்தாந்தம், ஒரே திட்டம் போன்றவற்றின் பிரகாரம் செயல்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
இதே வேளை, இக் கூட்டு அரசியல் அநுர அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என ஜேவிபியின்(JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 76 வருட ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் அதிகாரத் துஸ்பிரோயகம் போன்ற குற்றச் செயல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதே வேளை, மலையகத் தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ரணில் – சஜித் கூட்டு அணியில் இணைந்து செயற்படும் என மலையகத் தமிழ் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.