Sunday, November 2, 2025 1:07 pm
பொருளாதார சுமை உள்ள நாட்டினை ஆட்சி செய்வது என்றால் அது மிக சுலபமான காரியமல்ல. அதே நேரம் பொருளாதார சுமையுடனும், இனப்பிரச்சனையையும் கொண்டு நீடித்த நாட்களுக்கு ஆட்சி செய்வது என்பது மிகச் சவாலானது.
இலங்கையின் இருப்பிடம் என்பது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மேற்குலகமும், இந்தியா, சீனா என்ற போட்டியில் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் இலங்கையில் என்றுமே தனித்துவமானவையாக இருந்துள்ளமைக்கு கடந்த காலங்கள் மிகச் சிறந்த உதாரணங்கள்.
இலங்கையின் ஆட்சியில் இருக்கும் தரப்புக்கள் நீண்டகாலம் ஆட்சியில் இருக்கின்ற போது அனைத்து தரப்புக்களையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அனைத்து தரப்புக்களையும் திருப்படுத்துகின்ற நிலமை என்பது புவிசார் அரசியலில் எப்போதும் கிடையாது. ஒரு தரப்பின் வெற்றி என்பது இன்னுமோர் தரப்பிற்கு பிரச்சனையாகவே பார்க்கப்படுகின்றது.
இலங்கை உள்நாட்டில் சட்டங்களை மதித்து, தேசிய இனங்களை கொளரவித்து, உரிமைகளை வழங்கி, அடக்குமுறையில்லாது ஓர் ஆட்சியை மேற்கொள்ளுமாக இருந்தால் வேறுநாடுகளுக்கு அடிபணிய வேண்டிய அவசியமில்லை.
ஆனால் சிங்கள பௌத்த மேலாதிக்க நிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும், மலையக சமூகத்தினையும் அடக்குமுறைக்குள் வைத்துக்கொண்டு, உரிமைகளை மறுத்து ஆட்சியை மேற்கொள்ளுகின்ற போது வல்லரசுகளின் ஆதரவு தேவைப்படுகின்றது.
வல்லரசுகளின் ஆதரவு என்ற நிலைகளுக்குள் இலங்கை சென்றவுடன் புவிசார் அரசியலில் இலங்கை சிக்குண்டு கொள்ளுகின்றது. ஆகவே உள்நாட்டு விவகாரங்கள் புவிசார் அரசியலின் கருவிகளாக மாற்றம் அடைந்துவிடும்.
சொந்த நாட்டு மக்களை அடக்குமுறைகளுக்கு வைப்பதற்காகவும், நீண்டகால ஆட்சி மோகங்களினாலுமே இலங்கை வெளிநாடுகளிடம் சரணடைகின்றது. இந்த சிந்தனைதான் அதிகார துஷ்பிரையோகம், ஊழல், இலஞ்சத்திற்கு வித்திடுகின்றது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கரித்து இருந்திருந்தால் இந்த நாட்டிற்கு இவ்வளவு கடன் வந்திருக்காது. தமிழ் மக்களின் தேசத்தினை அழிப்பதற்கு இலங்கை மேற்கொண்ட விடயங்களின் விளைவே, இன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கையின் வளங்களை விற்பனை செய்யும் நிலை.
சீனாவின் முதலீடுகளாக இருக்கலாம், செயற்கை துறைமுகங்களாக இருக்கலாம், ஏன் இந்திய முதலீடுகள், திருகோணமலையில் குத்தகைக்கு வழங்கப்படும் நிலங்கள் வரை ஏன் இடம்பெறுகின்றது.
இந்த நாட்டில் இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லாது இருக்குமானால், இந்தளவு தூர பாதுகாப்பு செலவீனம் ஏற்பட்டிருக்காது. ஏற்பட வாய்ப்பும் இல்லை. அவை அனைத்து முதலீடுகளாக அமைந்திருக்கும்.
தற்போது சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் இலங்கையின் நிலை மேலோங்கி காணப்பட்டிருக்கும்.
இந்த உண்மைகளை எந்த தென்னிலங்கை கட்சிகளும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இந்த நாட்டினை தனிச்சிங்கள பௌத்த நாடாக வைத்திருக்கவேண்டும். அதற்காகவே இந்தநாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளுகின்ற அரசியல் கோட்பாடு மக்களிடம் இயல்பாகவே உள்ளது.
ஜெனீவா மற்றும் மனித உரிமைகள் என்ற விடயங்களில் அவர்களின் நிலைப்பாடுகள் என்பன அதன் காரணமாகவே தொடர்ச்சியாக பேணப்படுகின்றது. சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலை என்பது அதுதான்.
ஆனால் அரசியல் தலைவர்கள் இந்த அடிப்படை மனநிலையை வைத்து அரசியல் செய்வார்கள். சுயஇலாபங்களை மேற்கொள்ளுவார்கள். குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் மறையலாம் ஆனால் அவர்களின் இந்த கோட்பாடு இதுவரை இலங்கையில் மாறியதாக இல்லை.
தற்போது ஆட்சியில் இருக்கு தேசிய மக்கள் சக்தியின் கொள்கை கோட்பாடு என்பது என்ன? ஏன் ஜே.வி.பி யின் கோட்பாடுகள் என்ன? எதனையும் பேசமுடியும். ஆனால் ஆட்சிபீடம் என்பது இலங்கையின் சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்பதை தற்போதைய அவர்களின் நடத்தைகள் மிகவும் வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றது.
இதனாலேயே அரசியல் கைதிகள் என்று இந்த நாட்டில் யாருமே இல்லை என தற்போது அரசாங்கத்தினால் கூறமுடிகின்றது. பௌத்தத்தின் முன்னுருமை என்பதை விட்டுக்கொடுக்கமுடியாது சூழல். இதுதான் தென்னிலங்கையின் அரசியல் யதார்த்தம்.
அவர்கள் வேண்டும் என்றே தெரிந்துகொண்டுதான் இந்த நாட்டினை இப்படியான சூழலுக்குள் கொண்டு செல்லுகின்றனர். ஆனால் அவர்களுக்கு தெரியாதது என்வென்றால் உள்நாட்டு மக்களை மிதிப்பதற்கு வெளிநாடுகளிடம் தாங்கள் மிதிபடுகின்றோம் என்பது மட்டுமே!

இந்த வரலாற்று பார்வையிலே தற்போதை அரசியலை நாம் பார்க்கவேண்டும். தற்போது நாட்டின் பொருளாதார நிலை என்பது மிகமோசமானதாக மாறி வருகின்றது. வல்லரசுகளுடன் நெருங்கி செயற்பட்டாலும் அனைவரையும் திருப்திபடுத்த முடியாத சூழலில், எதிர்கட்சிகள் பலப்பட ஆரம்பித்துள்ளன.
மக்கள் போராட்டங்களை நாடுகளில் உருவாக்கி ஆட்சிகளை மாற்றுகின்ற ஒரு ஒன்லைன் புரட்சிகள் யுகத்திலே நாம் வாழ்கின்றோம். எந்த புரட்சிகளும் வல்லரசுகளின் ஆதரவு இன்றி வெற்றியடைவது கிடையாது.
ஆகவே இலங்கையில் மீண்டும் பொருளாதார சுமை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாக ஒரு ஒன்லைன் புரட்சி ஏற்படலாம்.
ஒரு புரட்சிக்கு மக்களின் எதிர்ப்பு மனநிலை என்பது உருவாக்கப்படுகின்ற சூழ்நிலையில், மக்களின் எதிர்ப்பை ஏதோ ஒருவகையில் காட்டி பிரதிபலிக்க கூடிய சூழ்நிலை உருவாக்கினால், புரட்சியில் இருந்து தப்பிக்கலாம் என ஒரு அனுமுறையை பின்பற்ற அயல்நாட்டின் உதவியுடன் ஜே.வி.பி. முனைகின்றது.
தென்னிலங்கையில் எதிர்கட்சிகள் பலமடைந்து, மக்களின் மனங்களில் ஒரு எதிர்ப்பு மனநிலை உருவாக மாகாணசபை தேர்தலை வைப்பது. அந்த தேர்தலுக்கு முன்னர் முக்கியமான பல வழக்குகளின் தீர்ப்புக்களை வெளியீடு செய்வது.
தற்போது புதிய மேல் நீதிமன்றங்களுக்கு முன்னால் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள் ஒதுக்கப்பட்ட செய்திகளை அறிந்திருப்பீர்கள். விரைவாக வழக்கு விசாரணை.
அந்த வழக்குகள் அனைத்து ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டதாக அமையும். ஆகவே பொருளாதார சூழலுக்கு இவர்களே காரணம் என்ற ஒரு பிரச்சாரத்துடன் மாகாணசபை தேர்தலை எதிர்கொள்வது. இரண்டாவது மக்களின் எதிர்ப்பு மனநிலையை ஒருவகையில் திருப்திப்படுத்துவது.
ஆனால் இலங்கையில் கடனை மீளசெலுத்த முடியாத காலத்திலே, விலைகளில் மிகப்பெரிய குறைப்பை அரசால் செய்யமுடியவில்லை. மீளசெலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகின்ற போது நிலமை எப்படிப்பட்டதாக அமையும். ஆகவே 2028 ல் இலங்கை தன்னுடைய கடன்களை மீளசெலுத்த ஆரம்பிக்கவேண்டும்.
ஆகவே அடுத்த வருடத்தில் மாகாணசபை தேர்தல் ஒன்று நடத்தப்படக்கூடிய சூழல் உண்டு என்பதைதான் தற்போதை அரசியல் சூழ்நிலைகள் வெளிப்படுத்துகின்றன. அதற்காக தமிழ் அரசியல் கட்சிகளும் செயற்பட ஆரம்பித்துள்ளன.

