*இந்த அரசியல் கபடத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்?
*காசாவில் போரை நிறுத்தக் கோரும் சிங்கள இடதுசாரிகள், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கேட்பதில்லை?
*’ஏக்கிய இராஜ்ஜிய ‘ என்ற புதிய யாப்புக் கதை “கூட்டு அரசியல் இரகசியம்”!
காசா போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் இடதுசாரி – சோசலிச அமைப்புகள், 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றோ, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றோ ஏன் கொழும்பில் இதுவரை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.
மாகாண சபைத் தேர்தல் எட்டு வருடங்களாக ஏன் நடத்தப்படவில்லை என்று கேட்டு குறைந்தபட்சம் ஒரு அறிக்கை கூட இந்த சிங்கள இடதுசாரி இயக்கங்கள் வெளியிடவில்லை.
ஜேவிபி உள்ளிட்ட சிங்கள பிரதான அரசியல் கட்சிகள் அல்லது சிங்கள பகுதி மாகாண சபைகளில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர்கள், உறுப்பினர்கள் எவரும் தேர்தலை நடத்த வேண்டும் என இதுவரை வாய்திறக்கவில்லை…
குறைந்தபட்சம் கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை?
ஆகவே —
1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையும் அதற்காக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டமும் தமிழர்களுக்கானது —-
—— அது 2009 இற்குப் பின்னர் தேவையில்லை என சிங்கள பிரதான அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, சிங்கள இடதுசாரி கட்சிகள் மற்றும் சோசலிசம் பேசுகின்ற சிங்கள கல்வியாளர்கள் எல்லோருமே ஒரு புள்ளியில் நின்று சிந்திக்கின்றனர் என்றே பொருள் கொள்ள முடியும்…
மாகாண சபைகளினால் செலவுகள் அதிகம் என்று டளஸ் அழகபெரும அமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
2002 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர், அரச செலவுகளை குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் பாிந்துரைத்தபோது, மாகாண சபை முறைகளை ஒழித்தால் நல்லது என 2023 இல் ரணில் அரசாங்கத்திற்கு மிலிந்த மொறகொட, பேராசிரியர் ரொகஹான் குணவர்த்தன போன்றவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதுதானே உண்மை! ஆகவே,
முன்னாள் அமைச்சரும் இந்தியாவுக்கான முன்னாள் தூதுவருமான மிலிந்த கொறிகொட, பேராசிரியர் ரொஹான் குணரட்ன, முன்னாள் இராணுவ அதிகாரி சரத்வீரசேகர ஆகியோர் —–
——– 13 ஐ இரத்துச் செய்ய வேண்டும் என கூறுகின்ற, மற்றும் கட்டுரைகளாக எழுதுகின்ற விடயங்களை, ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய முன்னாள் விடுதலை இயக்கங்களான, தற்போதைய தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏன் அம்பலப்படுத்த விரும்பில்லை?
அதேநேரம்—-
2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி, 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை எதிர்க்கட்சியாக இருந்த ஜேவிபி கோரவேயில்லை…
எதற்கெடுத்தாலும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திய ஜேவிபி —–
——- தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் தாம் ஆளும் கட்சியாக வரும் வரையும், மாகாண சபைத் தேர்லை நடத்துமாறு கோரி ஒருபோதும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்யவேயில்லை.
இந்த நிலையில் —-
தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ஜேவிபி, தேர்லை நடத்தும் என்று எந்த அடிப்படையில் எதிர்பார்க்க முடியும்?
ஆகவே —
சிங்கள தலைவர்கள் குறிப்பாக சிங்களத் தேசியக் கட்சிகள், அதாவது ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபக்ச, அநுரகுமார திஸாநாயக்க ஆகிய தலைவர்களும், சிங்கள இடதுசாரி கட்சிகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் எவருக்குமே மாகாண சபைத் தேர்தலை நடத்தவோ 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவோ விருப்பம் இல்லை என்பது இங்கே கண்கூடு.
இதுதான், 2009 இற்குப் பின்னரான “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
இப்படி ஒரு கூட்டு இரகசியச் சங்கதி, 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி எனப்படும் மைத்திரி – ரணில் ஆட்சியில் தான் முறைப்படி வகுக்கப்பட்டது.
அதாவது, நல்லாட்சி என்ற பெயரிலான வகிபாகம் இது.
2015 இல் உருவான இந்த சிங்கள அரசியல் கூட்டு இரகசியத்தின் மற்றொரு சங்கதி தான், “ஏக்கிய இராஜ்ஜிய” என்ற புதிய அரசியல் யாப்பு மாயை.
1994 இல் இருந்து ரணிலை எதிர்த்த ஜேபிவி, இப்போது ஆட்சி அமைத்துள்ள நிலையில், 2015 சிங்கள கூட்டு இரகசியத்தின் வகிபாகமாக இருந்த ‘ஏக்கிய இராஜ்ஜிய’ என்ற புதிய அரசியல் யாப்புக் கதையை நிறுவ முற்பாடுகிறது…
அதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஒத்துழைப்பை நாடியுமுள்ளதாக தகவல்…
ஆகவே —
சிங்கள தலைவர்களுடைய “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்” என்ற இந்த நாசூக்கான அரசியல் கபடத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லவா?
சிங்களத் தலைவர்களை பகைத்துக் கொள்ளாமலும், இந்தியாவுக்கு நோகாமலும் அதேநேரம் தமிழ்த்தேசிய பாதுகாவலர்களாகவும் காண்பித்துக் கொண்டு, பல முகங்களோடு தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் என்ன?
2012 ஆம் ஆண்டில் இருந்து —-
A) நிறைவேற்றப்பட்ட ஜெனீவா தீர்மானத்தை நிராகரிப்பது..
B) தனிநபா் பொறுப்புக் கூறலைக் கூட ஏற்க மறுப்பது–
C) வடக்கு கிழக்கில் சிங்கள அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தை நிறுவ “பொய்யான” – “கவர்ச்சிகரமான” வாக்குறுதிகளை வழங்கி, போரில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்றுவது —
D) தொடர்ச்சியாக பொய்யும் புரட்டும் அபிவிருத்தி என்ற பெயரில் பெயர்பலகைகளை நாட்டுவது, இசை நிகழ்ச்சிகளை நடத்துவது என்று சொல்ல முடியாத பகட்டு அரசியல் செயற்பாடுகள்…
ஆகவே, 2009 இல் இருந்து கடந்த 15 வருடங்களாக திட்டமிட்டு நடத்தப்படும் இந்த ஏமாற்று அரசியலை அம்பலப்படுத்த தமிழ் தரப்புக்கு ஏன் தயக்கம்?
மாற்று என்றும் சோசலிசம் எனவும் சொல்லிக் கொண்டு வடக்கு கிழக்கில் எட்டு ஆசனங்களையும் கைப்பற்றிக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசாங்கம், 76 வருடங்கள் சலித்துப்போன – இத்துப் போன அரசியலை செய்ய மாட்டோம் என்று கூறி, சிங்கள தேசிய கட்சிகள் மீது குற்றம் சுமத்தியது – கிண்டலடித்தது…
ஆனால் —
76 வருடங்கள் இத்துப் போன சலித்துப் போன அந்த அசியலை தானே அநுர வடக்கு கிழக்கில் செய்கிறார்?
இப் பின்னணியில் —-
13 ஐ நடைமுறைப்படுத்தி மாகாண சபை தேர்தலையும் நடத்துமாறு கோரிக்கை விடுத்தால், ஈபிஆர்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளை சிங்களத் தலைவர்கள் எந்த அடிப்படையில் நோக்குவர்?
ஏனெனில் —
ஜேஆர் காலத்தில் இருந்து குறிப்பாக 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத் திட்டம் என்ற முறைமையில் இருந்து, இன்று வரை, தமது சிங்கள தேசியவாத அரசியலை கன கச்சிதமாக நகர்த்துகின்றனர்.
தமிழர் உரிமை விவகாரத்தில் மட்டும் முரண்பாட்டில் உடன்பாடாக ஈடுபடுகின்றனர்.
ஆனால்—-
2009 இற்குப் பின்னரான சூழலில், ஜனநாயக வழியில் கூட்டுரிமையை தொடர்ந்தும் அழுத்தம் திருத்தமாக ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டிய தமிழ்த் தேசியக் கட்சிகள் —-
—— குறிப்பாக முன்னாள் விடுதலை இயக்கங்கள் வழி தவறிச் செல்கின்றனவா என்ற கேள்வியே எழுகின்றது.
கஜேந்திரகுமாரை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவையில் இருந்து எதற்காக விலகினர் என்பதற்கான பொருத்தமான விளக்கம் எதுவும் இதுவரை இல்லை.
ஆனால் —
இந்த முன்னாள் விடுதலை இயக்கங்கள் இவ்வாறு பொறுப்பில் இருந்து விலக முடியாது…
விமர்சனங்கள் – குற்றச்சாட்டுக்கள் என்பதற்கும் அப்பால் —-
—— 30 வருட ஆயுதப் போராட்டத்தில் இவர்களின் பங்களிப்பு இருந்ததை எவரும் மறுப்பதற்கில்லை.
2009 வரையான ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னர் தமிழர்களின் வரலாறுகளை திரிபுபடுத்தியும் கற்பனையிலும் எழுதப்பட்டுள்ள புதிய மாகாவம்சத்தை எந்த ஒரு சிங்கள கல்வியாளர்களும் சிங்கள இடதுசாரிகளும் இதுவரை நிராகரிக்கவில்லை.
ஒரு தேசிய இனம் பற்றிய பிழையான வரலாறு என கண்டித்து சிங்கள இடதுசாரிகள் – கல்வியாளர்கள் எவரும் பகிரங்கப்படுத்தவும் இல்லை.
அதேவேளை —
13 ஐ ஆதரித்து எழுதும் ஒரு சில தமிழ் அரசியல் பத்தி எழுத்தாளர்கள், இது பற்றி சுட்டிக்காட்ட ஏன் விரும்புவதில்லை?
2009 இற்குப் பின்னரான சிங்கள அரசியல் தலைவர்களின் சூச்சுமமான அரசியல் இரகசியக் கூட்டை அம்பலப்படுத்தாமல் “புலிகள் விட்ட பிழை” “புலிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவில்லை” ”யதார்த்த அரசியல்” என கற்பிதம் செய்வதில் அர்த்தமில்லை.
சிங்கள அரசியல் தலைவர்களை நியாயப்படுத்தி 13 ஐ புனிதப்படுத்தும், இவ்வாறான சில போலியான முற்போக்குத் தமிழர்கள், சில இடதுசாரித் தமிழர்கள், சில கம்யூனிஸ்ட் தமிழர்கள், பலஸ்தீனத்தில் அமெரிக்க – இஸ்ரேல் அரசுகள் புரியும் அநீதிகள் பற்றி ஆவேசமாக எழுதுவர்கள்….
ஆனால், இவர்கள்,
“இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பு 2009 இற்குப் பின்னர், தனது பௌத்த தேசிய கொள்கையை நன்றாக நீட்டி நிமிர்த்தி நிம்மதியாக – அமைதியாக – இலகுவாக, நகர்த்திச் செல்கிறது என்பதை மாத்திரம் வேண்டுமென்றே புரிந்துகொள்ள மறுப்பார்கள்…!
அதனை அவ்வப்போது நியாயப்படுத்தியும் விடுவர்…
அ.நிக்ஸன்-