வடமாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றத்தில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் சங்கத்தினரை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமாகிய சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநரை சந்தித்த சிறீதரன் எம்.பி, நியாயபூர்வமற்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் எதிர்வரும் காலங்களில் நியாயபூர்வமான முறையில் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதனூடாக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஆளுநரிடம் கோரியிருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் ஆசிரியர் சங்கத்தினரின் கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு எட்டப்படுமெனவும், இது விடயமாக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் சந்திப்பை மேற்கொள்வதாகவும் ஆளுநர் உறுதியளித்திருந்தார்.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமாகிய சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


