Thursday, October 30, 2025 1:44 pm
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் இன்று வியாழக்கிழமை செம்மணி பிரதேசத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான நீதி கிடைக்கப்பெற்று, மக்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி புதைக்குழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்துமயானத்தின் வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டமானது, பேரணியாக செம்மணிச் சந்திவரை சென்றது. பின்னர் உயிர்நீத்த உறவுகளின் அஞ்சலிக்காக செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள், கிறிஸ்தவ மத குருக்கள் அருட்சகோதரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செம்மணி மனித புதைகுழி விவகாரத்துக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்தப் போராட்டம் ஒன்றும் நடைபெற்றிருந்தது. அதேநேரம் ஜெனிவா மனித உரிமைச் சபை ஆணையாளரும் செம்மணிக்கு வந்து பார்வையிட்டிருந்தார்.
ஆனாலும் ஜெனிவா மனித உரிமைச் சபை இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தில் செம்மணி விவகாரம் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இன அழிப்புக்கான சர்வதேச நீதியை ஈழத் தமிழர்கள் கோருகின்றனர் என்பது பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.


