Monday, January 19, 2026 1:57 pm
இலங்கையின் கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் 6-ஆம் தரத்திற்கான நவீன “மொடியுல்” (Module) பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று பத்தரமுல்லயில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பத்தரமுல்ல இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக, 2026-ஆம் ஆண்டு 6-ஆம் தர மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள், இந்த புதிய கல்வி மாற்றங்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதோடு, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் இழுபறி நிலையைச் சுட்டிக்காட்டினர்.

தற்போதைய கல்வி முறை மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் தேவையற்ற பாடச் சுமைகளையும் ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள், அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட புதிய சீர்திருத்தங்கள் மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
குறிப்பாக, 6-ஆம் தர மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டத்தை (New Syllabus) காலதாமதமின்றி இந்த கல்வி ஆண்டிலேயே அமுல்படுத்த வேண்டும் என்பதே இவர்களது பிரதான கோரிக்கையாக இருந்தது. “பழைய பாடத்திட்டம் எமது பிள்ளைகளுக்குச் சுமை”, “கல்விச் சீர்திருத்தங்களை எமது பிள்ளைகளிடமிருந்து பறிக்காதீர்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் அமைதியான முறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
இந்த மாற்றங்களை ஜனாதிபதி தலையிட்டு துரிதப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பெற்றோர்கள், உலகளாவிய ரீதியில் கல்வித் துறை டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், இலங்கையிலும் இத்தகைய நவீன கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினர்.

புதிய மொடியுல் முறைமையானது ஒரு குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் சென்றடைய வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கல்வி அமைச்சின் நுழைவாயிலுக்கு அருகில் நீண்ட நேரம் திரண்டிருந்த இவர்களது கோரிக்கைகளை அதிகாரிகள் தரப்பில் கவனத்தில் கொள்வதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து, இந்தப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.

