Monday, March 23, 2026 3:23 pm
வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் போராட்டத்தின் போது வெளிப்படுத்தியிருந்தனர்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும் எனவும் போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர்.
எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம் என போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.


