Saturday, November 15, 2025 10:09 pm
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (East Container Terminal – ECT) நிர்மாணிப்பதில் நீண்டகால தாமதம் மற்றும் பின்னடைவால் எழும் பிரச்சினைகள் குறித்து கோப் (COPE) எனப்படும் பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு கலந்துரையாடியுள்ளது.
கலாநிதி நிஷாந்த சமரவீர தலைமையில் நாடாளுமன்றத்தில் நவம்பர் 13 ஆம் திகதி நடைபெற்ற கோப் கூட்டத்தில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தற்போதைய செயற்பாடுகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ,
இலங்கை துறைமுக அதிகாரசபையின் (Sri Lanka Ports Authority -SLPA) விடயங்கள் சென்ற செப்டம்பர் 10 ஆம் அதிகதி கோப் குழுவுக்கு எடுக்கப்பட்டு ஆராயப்பட்டது. அங்கு கணக்காய்வாளர் நாயகத்தின் கண்டுபிடித்த கணக்கியல் தவறுகள் மற்றும் அதிகாரசபையின் செயற்பாட்டு முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.
ஆனாலும் அக் கூட்டத்தில் தீர்க்க முடியாத சில பிரச்சினைகள் 13 ஆம் திகதி நடைபெற்ற கோப் குழுவில் மிண்டும் ஆராயப்பட்டது.
கலந்துரையாடலின் போது, 2021 நவம்பரில் ரூ.100 கோடியை வழங்குவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டதை கோப் குழு சுட்டிக்காட்டியது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனைய (East Container Terminal -ECT) ஒப்பந்தம் தாமதமானதால் 40,273 மில்லியன் நிதியின் நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது. ஆனாலும் இதுவரை முடிவுகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி ஒப்பந்தம் முன்னர் இந்திய – யப்பான் ஆகிய நாடுகளை மையப்படுத்திய கூட்டு திட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் , அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

