சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை இந்தியாவுக்குச் சென்றுள்ளார். அங்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பயணம் இதுவென ஹரிணி அமரசூரிய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை இந்தியாவுக்கு பக்க பலமாக செயற்பட்டு வந்த நிலையில், சீனாவுடனும் நெருங்கிய உறவை பேண முற்படுகின்றது.
சீன பயணத்தின் போது ஹரிணி அமரசூரிய இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருக்கின்றார். இந்த நிலையில் இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள ஹரிணி அமரசூரிய அங்கு பல சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
அதே நேரம் தொழிநுட்ப உதவி உள்ளிட்ட பல ஒத்துழைப்பு செயற்பாடுகளில் இந்தியா இலங்கைக்கு பக்க பலமாக இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இடம்பெற்ற சந்திப்பில் உறுதியளித்துள்ளதாக புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.
சீனாவுக்கு எதிரான இராணுவ அணியை இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் உருவாக்கி பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயற்பட்டு வருகின்றது.
இப் பின்னணியில் இலங்கையும் இந்தியாவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன. ஆனால் ஹரிணியின் சீன பயணத்தின் பின்னரான இலங்கையின் கொள்கை எவ்வாறு அமையும் தற்போதைக்கு கூற முடியாதென கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதே வேளை சீன பயணம் தொடர்பாகவும் பிரதமர் ஹரிணி, அமைச்சர் ஜெய்சங்கருக்கு சிறிய விளக்கமளித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பு தொடர்பாக கொழும்பிலுள்ள பிரதமர் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கை
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் பிரதமராகப் பதவி ஏற்றதன் பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக, ஒக்டோபர் 15 ஆம் திகதி இந்தியாவின் புதுடெல்லிக்குப் புறப்பட்டார்.
புதுடெல்லி சென்றடைந்த பிரதமரை, இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் திருமதி. மஹிஷினி கொலொன்னே மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை, இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி உள்ளிட்ட மேலும் பல சிரேஷ்ட இந்திய அரசியல் தலைவர்களுடன் இலங்கைப் பிரதமர் மேற்கொள்ள இருக்கின்றார்.
NDTV உலக மாநாடு 2025 இல் பங்கேற்கும் பிரதமர் அதில் முக்கிய உரையை ஆற்ற உள்ளார். இந்த மாநாடானது உலகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து, தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச சவால்கள் மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்க வழி வகுக்கும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்விக்கான அமைச்சராக, பிரதமர் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) டெல்லி, மற்றும் நிதி ஆயோக் (NITI Aayog) ஆகியவற்றிற்கு விஜயம் செய்து, கல்வி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியின் (Hindu College) பழைய மாணவியான இலங்கைப் பிரதமர், இந்த விஜயத்தின் போது தனது பழைய கல்லூரிக்கும் விஜயம் செய்ய உள்ளார். அத்தோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு வர்த்தக நிகழ்விலும் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விஜயமானது, இலங்கை-இந்திய உறவுகளின் நீடித்த முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடு, இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மை மற்றும் சுபீட்சத்திற்காக ஒத்துழைப்பை பலப்படுத்த இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.