Friday, December 12, 2025 12:06 pm
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால், அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணியளவில், சுமார் 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ள ஜப்பானிய வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக கடல் அலைகள் 1 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமையும் அதே பிராந்தியத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வடக்கு ஹொக்கைடோவிலிருந்து (Hokkaido) டோக்கியோவிற்கு கிழக்கே சிபா (Chiba) வரையிலான பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்பதால், அது குறித்து அரசாங்கம் பொதுமக்களை ஒரு வாரத்திற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவித்தல்களை விடுத்திருந்தது.

