Monday, February 9, 2026 10:06 am
இன்று திங்கட்கிழமை முதல் தபால் கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் எடைக் கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 50 ரூபாவாக இருந்த சாதாரண கடிதத்திற்கான கட்டணம் 70 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. தபால் அட்டை ஒன்றின் கட்டணம் 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளைகள், சமூக சேவை மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கடிதங்களுக்கான கட்டணம் 30 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கான விசேட பதிவுத் தபால் கட்டணம் 110 ரூபாவிலிருந்து 130 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சாதாரண மற்றும் வர்த்தக கடித சேவைகளின் அடிப்படை எடைப்பிரிவு 20 கிராமிலிருந்து 30 கிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், துண்டுப்பிரசுரங்கள் அல்லது பொதிகளின் அதிகபட்ச எடை 100 கிராமிலிருந்து 120 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பதிவுத் தபால் கட்டணமான 60 ரூபாயில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சாதாரண பொதி கட்டணம் மற்றும் இலங்கை தபால் கூரியர் சேவைகளுக்கான கட்டணங்களிலும் எவ்வித மாற்றமுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விளம்பர தபால் சேவை, டெலிமெயில் சேவை, முத்திரை உறைகள், தபால் பை சேவை மற்றும் கட்டணம் செலுத்தப்படாத அல்லது குறைந்த கட்டணம் செலுத்தப்பட்ட தபால் பொருட்களுக்கான தண்டப்பணக் கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

