Wednesday, March 25, 2026 2:19 pm
மக்கள் தமது பணம் மற்றும் தங்க நகைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கி அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு பெண் கொலை முயற்சியிலிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சந்தேகநபர்கள் பொது இடங்கள் அல்லது பொதுப் போக்குவரத்தின் போது மக்களிடம் மிகவும் நெருக்கமாகப் பழகி நம்பிக்கையைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும் போதைப்பொருள் அல்லது மயக்க மருந்து கலந்த இனிப்பு வகைகள், குளிர் பானங்கள் வழங்குவதுடன் விஷ ஸ்ப்ரே அல்லது மிளகாய்த் தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களை செயலிழக்கச் செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் தெரியாதவர்கள் வழங்கும் வாகன போக்குவரத்து உதவிகளை பொதுமக்கள் அவதானத்துடன் கையாளுமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக 119 அல்லது 118 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறும் பொலிஸ் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

