Wednesday, January 7, 2026 12:40 pm
இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
இன்று காலை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்றுள்ளார். குறித்த சந்திப்புக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதன் போது, ஏற்கெனவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்தக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி. இந்தக் கூட்டணி அதிமுக – பாமக கட்சியினர் மற்றும் தொண்டர்கள் விரும்பியவாறு அமைந்துள்ளது. இது வெற்றிக் கூட்டணி.
தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்துவிட்டோம். மற்றவை பின்னர் அறிவிக்கப்படும் என இபிஎஸ் கூறினார்.
அன்புமணி பேசியபோது, வரும் சட்டப்பேரவை தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து சந்திக்கும் வகையில் இணைந்திருக்கிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். இது வலுவான கூட்டணி.
சமீபத்தில் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டபோது கிராமப்புற மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருப்பதை பார்த்தோம். தேர்தல் எப்போது வரும் என்று அவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். உறுதியாக எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

