Thursday, December 18, 2025 1:51 pm
கேரளாவின் கோழிக்கோடுக்கு சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து 160 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் கியர் மற்றும் டயர் பழுதடைந்ததால் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது பற்றிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனம் முழு அவசரகால சூழ்நிலையில் இன்று காலை 09.07 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக கூறியது.
விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் தரையில் இருந்த எவருக்கும் இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவசர சேவைகள் முன்கூட்டியே செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதன் வலது பக்க டயர்கள் இரண்டும் வெடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், ஜித்தா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்த மர்மமான பொருளால் விமானத்தின் டயர் சேதமடைந்திருக்கலாம் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

