Tuesday, March 10, 2026 4:18 pm
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை இம்மாதம் 18ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போதே மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் விசாரணைக்காக வரும் 18ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிட்டது.
எந்தவொரு நியாயமான காரணமுமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், இதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

