Tuesday, November 18, 2025 3:58 pm
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார்.
1971 ஆம் ஆண்டின் 01 ஆம இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் கிடைத்து.
நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் பிரதிநிதிகளுக்கும் அவர்களுடைய மனைவிமாருக்கும் வழங்கப்பட்டுள்ள ஓய்வூதிய உரித்தை இரத்துச் செய்யும் நோக்கில் ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இலங்கைச் சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.
இச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காகவும் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் கூறினார்.

