Tuesday, October 21, 2025 9:06 pm
ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தானின் தேசிய நலனுக்கு எதிரான எந்த நிபந்தனையையும் விதிக்க முடியாது என்று பாகிஸ்தான் மத்திய நிதி மற்றும் வருமானத்துறை அமைச்சர் முஹம்மது ஔரங்கசீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியை பாகிஸ்தான் ரூடே (pakistantoday) என்ற ஆங்கில செய்தித் தளம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளுக்கு ஐஎம்எப் வழங்கி வரும் நிதிகள் மற்றும் உதவிகள் – ஆலோசனைகள் பற்றிய விபரங்களை வெளியிட்டு வரும் ஏப்பி செய்தி நிறுவனத்தை மேற்கோள் காண்பித்து, பாகிஸ்தான் ருடே செய்தி இதனை வெளியிட்டுள்ளது.
தேசிய நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களுக்கு பாகிஸ்தான் முக்கியத்துவம் கொடுப்பது பற்றி செய்தியில் விபரிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் கலந்து கொண்ட வோஷிங்டனில் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் முஹம்மது ஔரங்கசீப்பின், பாகிஸ்தானின் பொருளாதார அபிவிருத்திக்கு ஐஎம்எப் மற்றும் உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிட முடியாது என்று வலியுறுத்திக் கூறினார்.
எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.2 பில்லியன் டொலர் தொகையை பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது என்பதை உறுதிப்படுத்திய அவுரங்கசீப், தற்போதைய திட்டத்தின் கீழ் விவாதங்கள் சுமூகமாக நடந்து வருவதாகவும் கூறினார்.
பல அமெரிக்க நிறுவனங்கள் பாகிஸ்தானில் முதலீடு செய்வதில் வலுவான ஆர்வம் காட்டியுள்ளன, அதே நேரத்தில் சீன முதலீடுகள் தொடர்ந்து புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
புனரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒரே நேரத்தில் நிதியுதவி செய்யும் அதே வேளையில், வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை பாகிஸ்தான் தனது சொந்த நிதியில் மீள அமைத்தாகவும் அமைச்சர் கூறினார்.
அதேவேளை இலங்கையும் தமது தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன் அடிப்படையில் ஐஎம்எப் தலையிட முடியாது என வலியுறுத்தி வருகின்றது. அத்துடன் மீள்நல்லிணக்கத்தின் மூலமே இலங்கைப் பொருளாதாரம் முன்னேற்றமடைய முடியும் என்று ஐஎம்எப் கூறும் பரிந்துரைகளையும் இலஙகை பெரியளவில் ஏற்பதில்லை.
இருந்தாலும் வடக்கு கிழக்கு பிரதேச அபிவிருத்தி மற்றும் மீள குடியேற்றங்கள் தொடர்பான பரிந்துரைகளை இலங்கை ஏற்றுச் செயற்படுத்தி வருகின்றது. ஆனாலும் ஐஎம்எப் பரிந்துரைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.