ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியுள்ள நிலையில், அங்கு ஆட்சி செய்யும் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் நாட்டை அபிவிருத்திக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போர் ஆரம்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தொடர்ச்சியாக நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் (Reuters) தெரிவித்துள்ளது. இதுவரையும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பதிலுக்கு ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், பலர் உயிரிழந்துள்ளதாகவும் ரொய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தாக்குவதற்கு இந்தியாதான் காரணம் என்று புதடில்லி மீது பாகிஸ்தான் அரசு குற்றம் சுமத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை இந்தியா தூண்டிவிடுவதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதில் இந்திய அரசியல் பின்னணி இருப்பதாக பாக்கிஸ்தான் ருடே (pakistantoday) என்ற ஆங்கில நாளிதழ் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிம் முனிர், ஆப்கானிஸ்தானின் தாக்குதல் தொடர்ந்தால் பதில் நடவடிக்கை மேலும் தீவிரமாகும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இயங்கி வரும் தெஹ்ரிக் இத் தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
இரண்டு நாடுகளும தொடர்ந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும், பாகிஸ்தான் இராணுவத்துக்கு அதிக இழப்பு என்றும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இதேவேளை இத் தாக்குதலை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. மோதலை நிறுத்துமாறும் வலியுறுத்தியுளளன.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி இந்தியாவை நோக்கி அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளதாக ஒன்இந்தியா என்ற செய்தி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் மோதல் குறித்துப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்த மோதலை நிறுத்த முடியும் என்றார். அத்துடன் பொதுமக்கள் கொல்லப்படுவதை தான் விரும்பவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த மோதலை கண்டித்துள்ள டொனால்ட் டரம், மோதலை இரண்டு நாடுகளும் உடனடியாக இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.