Sunday, October 26, 2025 4:47 pm
போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் கொலைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார சுமைகள் போன்றவற்றைக் கண்டித்து, கொழும்பு நுகேகொடையில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஜேவிபியை மையப்படுத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள எதிர்க்கட்சிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இது பற்றி கலந்துரையாடியுள்ளன.
ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் என்ற பெயரில், அரசியல் பழிவாங்கும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இப் பின்னணியில், மாபெரும் பேரணி ஒன்றை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி கொழும்பின் பிரதான வர்த்தக நகரான நுகேகொடையில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் அந்தப் பேரணியில் பங்குகொள்ளவுள்ளன.
மலையகத் தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பேரணியில் பங்குகொள்ளும் எனவும், வர்த்தகர்கள், பொது அமைப்புகளுடன் இது தொடர்பாக உரையாடவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
பேரணியை நடத்துவது குறித்து, அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் நளை செவ்வாய்க்கிமையும் கலந்துரையாடவுள்ளன.
அதேவேளை ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் மீண்டும் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை மீளவும் செயற்படுத்தி புதிய அரசியல் சக்தியாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

