Thursday, October 23, 2025 4:07 pm
மாகாணசபைகள் சார்பில் மக்களோடு நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றும் நிறுவனங்கள் உள்ளூராட்சி மன்றங்களே. அந்த மன்றங்களின் சேவைகளை மக்களிடத்தே முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும்
அவற்றை விரைந்து சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றும் பொறுப்பும் உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களையே சாரும்.
எனவே தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கான நகர அபிவிருத்தி அதிகார சபையின் விதிமுறைகள் குறித்த பயிற்சித் திட்டம்,
வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து மேலாண்மை மேம்பாட்டுப் பயிற்சிப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டு வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகால்,
கிளிநொச்சியிலுள்ள பயிற்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (23.10.2025) இடம்பெற்றது.
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சனின் வரவேற்புரையைத் தொடர்ந்து, உரையாற்றிய ஆளுநர்,
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வெவ்வேறு விடயப் பரப்புக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன.
உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதன் ஊடாகவே எமது மாகாணத்தின் அடிமட்ட அலகான உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்த முடியும். உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான் மக்களின் தேவைகளை முழுமைப்படுத்த முடியும்.
மத்திய அரசாங்கத்தின் கீழான மாவட்டச் செயலகங்கள்,
பிரதேச செயலகங்கள் என்பன எவ்வாறு சுறுசுறுப்பாக விரைந்து மக்களின் தேவைகளைத் தீர்க்கின்றனவோ
அதைப்போல மாகாண அலகின் அலுவலகங்களும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.
அதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட கௌரவ தவிசாளர்களான நீங்கள்தான் சிறப்பாகச் செயற்பட வேண்டும்.
அதேநேரம் எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில்
சிறப்பாகச் செயற்படும் உள்ளூராட்சி மன்றங்களை கௌரவிக்கவேண்டும்.
இதன் ஊடாக சிறப்பாகச் செயற்படுபவர்களை நாங்கள் ஊக்குவிக்கலாம்.
அத்துடன் தவிசாளர்களும், செயலாளர்களும் மக்களுக்கு சேவையாற்றத்தான் வந்தவர்கள்.
அதை மாத்திரம் மனதிலிருத்தி செயற்பட்டால் மக்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.