Monday, December 15, 2025 11:41 am
வத்தளையில் நேற்றைய தினம் (14 ) சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையொன்றை நாட்டுக்குக் கொண்டு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தாய்லாந்தின் பேங்கொக்கில் இந்த போதைப்பொருட்களை பெற்று மற்றொரு நபர் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்து , தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த கடத்தல்காரர் ஒருவரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளையைச் சேர்ந்த 34 வயதான இளைஞன் எனத் தெரிய வந்துள்ளதோடு , பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் இருபத்தொரு கோடி அறுபத்தி ஆறு இலட்சத்து எண்பதாயிரம் (216,680,000) ரூபா என தெரிய வந்துள்ளது.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது , சுமார் 20 பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோகிராம் குஷ் போதைப்பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மேலும் , அவரிடமிருந்து 4 ,900 அமெரிக்க டொலர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடனும்,பணத்துடனும் இன்று திங்கட்கிழமை (15) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

