Tuesday, January 13, 2026 3:52 pm
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 31,318 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் இந்தத் திட்டத்தின் விபரங்களை வெளியிட்டார்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீசாலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த ஆரம்ப விழா நடைபெறவுள்ளது. குறித்த தினத்தில் யாழ். குடாநாட்டில் வீடற்ற 500 குடும்பங்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டுவதற்கான முதற்கட்டக் காசோலைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக முதற்கட்டமாக 2500 வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மூன்று தவணைகளாக வழங்கப்படும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 13,347 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அரசாங்க ஊழியர்களுக்காக 1000 வீடுகளும், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக 4998 வீடுகளும் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இந்தத் திட்டத்தின் கீழ் 18,229 வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்கான புனரமைப்புப் பணிகள் இந்தத் திட்டத்திற்கு இணையாகத் தனியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

