Monday, October 27, 2025 4:35 pm
தனது மகளான நற்றாலி ஆனின் (Natalie Anne) 34வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஒக்டோபர் 16ஆம் திகதி இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை எல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தின் ஒக்பாத் (Oakpath) பகுதியைச் சேர்ந்த 53 வயதான பிறிற் மெல்லென்ற் (Brett Maclean) என்பவரே உயிரிழந்தவர்.
கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி எல்லக்குச் செல்வதற்கு முன்னர் இருவரும் முதலில் மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிகமவிற்கு விஜயம் செய்ததாகவும், அங்கு உள்ளூர் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை தந்தையும் மகளும் எல்லப்பாறையில் நடைபயணத்திற்குச் சென்ற போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மக்ளீன் மலை உச்சியில் திடீரென சரிந்து விழுந்ததாகவும், பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து, பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர நீதவான் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், விசேட நீதி வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

