Monday, December 15, 2025 4:30 pm
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை இரண்டு தினங்களின் கீழ் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
அதன்படி , கடுமையான அனர்த்தங்களுக்கு உள்ளான பாடசாலைகள் தவிர ஏனைய பாடசாலைகள் நாளை செவ்வாய்க்கிழமை (16) திறக்கப்படவுள்ளதுடன் , பாதிப்புக்குள்ளான பாடசாலைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன் , பதுளை மாவட்டத்தில் உள்ள மஹியங்கனை வலயத்தின் திக்கியாய வித்தியாலயம் களுக்கல வித்தியாலயம் மற்றும் பின்னகொல்ல வித்தியாலயம் ஆகியவற்றைத் தவிர ஏனைய 78 பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளன.
தற்போதைய அனர்த்த பாதிப்பினை கருத்திற் கொண்டு பதுளை மாவட்டத்தின் ஏனைய வலயங்களான பண்டாரவளை வலயம் , பஸ்ஸரை வலயம் , பதுளை வலயம், வெலிமடை வலயம் மற்றும் ஊவா-பரணகம வலயம் ஆகியவற்றில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரோஹித அமரதாச தெரிவித்தார்.

