Wednesday, October 29, 2025 2:25 pm
ஆந்திராவில் கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் ‘மோன்தா’ அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோன்தா புயல் வடக்கு, வட மேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் கடந்த ஆறு மணி நேரங்களில் நகர்ந்துள்ளது. ஆந்திராவில் நர்சாபூரிலிருந்து வடமேற்கு திசையில் 80 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து மேற்கில் 100 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மோன்தா புயல் ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

