Friday, December 12, 2025 1:35 pm
வேலையில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி டெலிகிராம் செயலி மூலம் வலைவிரித்து பணமோசடி செய்யும் மர்மகும்பல்கள் தொடர்பான புகார்கள் நாட்டில் அதிகரித்துள்ளது.
இணையத்தளம் ஊடாக பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண உப பிரிவு கைது செய்துள்ளது.
இணையத்தளம் ஊடாக பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, மோசடியான முறையில் வங்கிக் கணக்கொன்றில் பணத்தை வைப்புச் செய்தமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முறைப்பாட்டாளரை ஏமாற்றி ‘டெலிகிராம்’ (Telegram) குழுவொன்றில் இணைத்துக்கொண்டு 6,860,000 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட பணத்தில் 500,000 ரூபாவை சந்தேகநபர் தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் 31 வயதுடைய வெலிப்பென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண உப பிரிவு மேற்கொண்டு வருகிறது.
அதேவேளையில் பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி இணையம் வழியில் பணம் பறிக்கும் சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன.
இதனால் , பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் யாரிடம் புகார் அளிப்பது எனத்தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. குறுஞ்செய்தி , டெலிகிராம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என வாய்ப்புகள் வழங்குபவர்கள் மோசடி நபர்களாக இருக்கலாம்.
இதனால் ,பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம் என பொலிஸார் எச்சரிக்கின்றனர்.

