Wednesday, October 29, 2025 10:57 am
ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்படக் கூடிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் முக்கிய பிரமுகர்கள் குறிப்பாக கொழும்பை மையமாகக் கொண்ட வர்த்தக பிரமுகர்கள், எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில், பங்குகொள்ளவுள்ளனர்.
ஆனால் சஜித் இப் பேரணியில் பங்கு கொள்ள வாய்ப்பில்லை என்றும், முழுமையான இணக்கம் ஏற்பட்ட பின்னர் இரண்டு அரசியல் தலைவர்களும் ஒரே மேடையில் இருப்பர் எனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
அதேநேரம், சஜித் பிரேமதாச 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் பங்கொள்ளமாட்டார் என்பதை கட்சியின் மூத்த உறுப்பினர் சுஜீவ சேனசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பின் புறகர் பகுதியான நுகேகொடையில் நடைபெறவுள்ள அநுர அரசுக்கு எதிரான பேரணியில் பொது அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகளும் பங்குகொள்ளவுள்ளன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளன.
இப் பேரணியில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் அவரது ஆதரவாளர்களும் பங்கு கொள்வர் என்றும், ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ள பொய்ப்பிரச்சாரங்கள் பற்றி இப் பேரணியில் எடுத்துரைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமன கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை அநுர அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர், சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பொய்யான பரப்புரைகளை முறியடிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு வழங்கும் என்றும் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை நுகேகொடயில் இடம்பெறவுள்ள இப் பேரணி தொடர்பாக கொழும்பில் இன்று புதன்கிழமை மற்றொரு உரையாடல் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

