Thursday, November 20, 2025 10:53 am
கனடாவில் வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 52 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காலி மற்றும் நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம் கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி தலா 13 இலட்சம் ரூபாய் வீதம் பணம் பெற்றுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட போதும் வெளிநாட்டு வேலைகளை வழங்காத நிலையில் பாதிக்கப்பட்டோரால் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டபோது சைப்ரஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தலா 75,000 ரூபா பெற்றுக் கொண்ட மூன்று ஒப்பந்த ஆவணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை சுவிட்சர்லாந்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 17 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவர் கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

