Tuesday, November 11, 2025 10:43 am
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது காரில் இருந்து வாள், 5000 வரையான போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டன. மேலும் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், சந்தேக நபர் பயணித்த கார் போலி இலக்க தகடு கொண்ட கார் என கண்டறியப்பட்டது.
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாகன உதவி புரிந்தார், என்ற அடிப்படையில் கைதான குறித்த நபருக்கு யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறை கும்பல்களுடன் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், அண்மையில் யாழில் கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவால் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

