Tuesday, January 20, 2026 3:08 pm
கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2010 டிசம்பர் 16ஆம் திகதி மந்தைவெளி, கொடிகாமம் பகுதியில் 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீண்டகாலமாக யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் எதிரிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா முன்னிலையானார். வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி கா. நசிகேதன் முன்னிலையாகி வழக்கை நெறிப்படுத்தினார்.
சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்த நீதிபதி, எதிரிகள் மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்கு தொடுனர் நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மந்தைவெளி பிரதேசத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் இருவரையும் குற்றவாளிகளாக இனங்கண்ட நீதிபதி, மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

