Monday, March 9, 2026 3:25 pm
நுவெரலியா – டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்தோடு, வைத்தியசாலையின் ஊழியர்கள் உடலுறவு கொண்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் போலியானது என விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்ட விசாரணகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்த நிலையில், டிக்கோயா வைத்தியசாலையில் பெண்ணின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தபோது, வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் இரவு நேரத்தில் பிணவறைக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல் மீது அங்கிருந்த ஊழியர்கள் உடலுறவு கொண்டதாக தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டங்களை தொடர்ந்து நுவெரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த விவகாரம் பற்றி பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்த நிலையில், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதுபற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் 27ஆம் திகதி மூவரடங்கிய குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு, பிணவறை பகுதியின் சிசிடிவி காட்சிகளை அந்த குழு ஆராய்ந்ததில் வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் மூவர் இரவு நேரத்தில் மூன்று தடவகைள் பிணவறைக்குள் சென்று வந்திருப்பது சிசிடிவி வீடியோவில் தெரியவந்துள்ளது. மூன்று தடவைகள் பிணவறையின் உள்ளே வைத்தியசாலையின் ஊழியர்கள் சென்றிருந்தாலும் சில வினாடிகளிலேயே அவர்கள் வெளியே வந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் இரு ஊழியர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளின் முடிவில் பெண்ணின் உடலை வைத்தியசாலையின் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு போலியானது என டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
வைத்தியசாலையின் உள்ளக விசாரணைகளுக்கு மேலதிகமாக நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஊடாகவும் விசேட வைத்தியரடங்கிய குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற தினத்திலிருந்து பிணவறைக்கு முதல்முறை சென்றிருந்த சிற்றூழியரை காணவில்லை எனவும் அவர் பற்றிய தகவல் இல்லை எனவும் இவரை பொலிஸார் தேடி வருகின்றனர் எனவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
எவ்வாறயினும் உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் இச்சம்பவம் பற்றி நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

