Tuesday, January 6, 2026 12:10 pm
வழக்குகளை தொடர்ந்து அரசாங்கத்தைத் தோற்கடிக்க முடியாது. கட்சியைப் பிரித்து நாட்டை ஆள முடியாது. மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளுக்கு அரசியல் புரியலாம் ஆனால் நாட்டை ஆளத் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது குறித்த எமது திட்டம் ஆரம்பமாகியுள்ளது. 10-11 வருடங்களாகக் கட்சித் தலைமையகத்திற்கு வராத பல முக்கிய அரசியல்வாதிகள் வந்துள்ளனர்.
வழக்குகளை தொடர்ந்து அரசாங்கத்தைத் தோற்கடிக்க முடியாது. கட்சியைப் பிரித்து நாட்டை ஆள முடியாது. மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளுக்கு அரசியல் புரியலாம், ஆனால் நாட்டை ஆளத் தெரியாது. அதுதான் இன்றைய சிக்கல். எமது கட்சி தொடர்பில் 18 வழக்குகள் இருந்தன. அதில் 17 வழக்குகளைப் பேசித் தீர்த்துவிட்டோம். விஜேதாச ராஜபக்ஷ எமக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டு எமது உப தலைவராக இணைந்துள்ளார். இப்போது தயாசிறி ஜயசேகர தொடர்ந்த வழக்கு மட்டுமே எஞ்சியுள்ளது.
அவருடன் ஐந்து நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். முதலில் அவருக்கு ‘தேசிய அமைப்பாளர்’ பதவியை வழங்குவதாகக் கூறினோம். அவரும் அதற்கு முதலில் சம்மதித்தார். ஆனால் மறுநாள் ‘எனது குடும்பத்தினர் இதற்குச் சம்மதிக்கவில்லை’ என்று கூறிவிட்டுச் சென்றார். இருப்பினும் எமது கட்சியின் கதவுகள் அவருக்காக இன்னும் திறந்தே உள்ளன. யாரையும் நீக்கும் எண்ணம் எமக்கு இல்லை. அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு சிறந்த இளைஞர் அணியிடம் இந்தக் கட்சியைக் கையளிப்பதே எனது நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

