Friday, October 31, 2025 12:15 pm
“அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP) ” திட்டத்தின் கீழ், கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கான மானிய ஒப்பந்தத்தில், இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசொமட்டா, ஸ்கவிதா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண திட்டத்தின் (SHARP) திட்ட மேலாளர் சரத் ஜெயவர்தனவுடன் நேற்று வியாழக்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில், மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக SHARPஆல் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக ஜப்பான் அரசு 477,185 அமெரிக்க டாலர்களை (அண்ணளவாக ரூ. 144 மில்லியன்) வழங்கியுள்ளது.
இதன் மூலம் 180,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நிலம், கண்ணிவெடி இல்லாததாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சுமார் 600 பேர் தங்கள் நிலங்களுக்குத் திரும்பவும், சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,500 பேர் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002 முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில், ஜப்பான் ஒரு முக்கிய நன்கொடையாளராக இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தேசிய நல்லிணக்கமும் சமூக-பொருளாதார வளர்ச்சியும் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.



