Wednesday, November 5, 2025 8:19 pm
இலங்கைத்தீவின் அரசியல் – பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்பட வேண்டும் என்பதில் இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு கிடைக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாசவை இன்று புதன்கிழமை புதுடில்லியில் சந்தித்து உரையாடிய ஜெய்சங்கர், இந்திய – இலங்கை பொருளாதார உறவு மேலும் வளம் பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இச் சந்திப்பு தொடர்பாக கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த உரையாடிலின் போது, இலங்கைத்தீவின் இறைமை – சுதந்திரம் போன்றவற்றை பாதுகாக்கும் அதேவேளை, அனைத்து வல்லரசு நாடுகளுடனும் சமநிலையான உறவுகளை வளர்ப்பதன் அடிப்படையில், அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையை “இலங்கை அரசு” என்ற கட்டமைப்பு பின்பற்றுவதற்கான சிங்கள அரசியல் தலைவர்களின் நிலைப்பாட்டை சஜித் பிரேமதாச, ஜெய்சங்கரிடம் எடுத்துக் கூறினார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் குறித்தும் அவர் ஜெய்சங்கருக்கு விளக்கமளித்ததுடன், 2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பாக, இலங்கை எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான சவால்களையும் சஜித் பிரேமதாச எடுத்துக் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

