Thursday, February 19, 2026 3:19 pm
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்தனர்.

இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கெளரவித்து வருகிறார்.

பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

