Wednesday, February 18, 2026 4:25 pm
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.
இப்பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானபீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், இந்துக்கற்கைள் பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும் இப்பட்டமளிப்பு விழாவில் சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 94 தங்கப்பதக்கங்களும், 69 பரிசில்களும், 15 புலமைப்பரிசில்களும் வழங்கப்பட இருக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சீர்பெறும் விருதான பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவிருக்கின்றன.

