Wednesday, February 25, 2026 11:08 am
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
மண்டைதீவில் அமையவுள்ள இந்த மைதானத்துக்கான கட்டுமானப் பணிகளை, முறையான சுற்றுச்சூழல் அனுமதிச் செயல்முறைகள் பூர்த்தியாகும் வரை தற்காலிகமாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
“யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானக் கட்டுமானப் பணியானது நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஒரு பாரிய திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமெனில், அதற்குத் தேவையான சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் அவசியமானவை.
எனவே, சம்பந்தப்பட்ட சகல அமைச்சுகளுடனும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மைதானம் அமைக்கும் வேலைத்திட்டத்தை எவ்விதத் தடையுமின்றி விரைவில் முடிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதி கிடைத்தவுடன், இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

