Thursday, December 4, 2025 11:47 am
இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் நடைபெறும் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்தப் போட்டி எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நேற்று ஆரம்பமான விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சீரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி S. அறிவழகன், கௌரவ விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு சங்கரன் ராஜகோபால், சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி S. சிவன்சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியின் வெற்றியாளருக்கு ரூ. 24 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை நாட்டில் நடைபெற்ற எந்த சர்வதேச சதுரங்கப் போட்டியிலும் இல்லாத மிக உயர்ந்த பரிசாகும்.
2023 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகமான இந்தப் போட்டியில் முதல் JICC 2023 சாம்பியன் ஆக இந்தியா – நாக்பூரைச் சேர்ந்த IM Anup Deshmukh, இரண்டாவது JICC 2024 சாம்பியன் ஆக இந்தியா – மும்பையைச் சேர்ந்த IM Nubairshah Shaikh காணப்படுகின்றனர்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய வீரர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதை அடுத்து, இந்த ஆண்டும் இந்தியாவின் பல முன்னணி வீரர்கள் வருகை தந்துள்ளதால் போட்டியில் அதிக ஆவல் நிலவுகிறது.

இந்த ஆண்டு JICC போட்டியில் இந்தியாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட உயர்தர ரேட்டிங் வீரர்கள் பங்கேற்கின்றனர். மலேசியா, பங்களாதேஷ், செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் இணைந்துள்ளனர்.
நடைபெறும் போட்டியில் புதிதாக Mechalite and Corporate Sector, School Category (Open & Women’s), Higher Education Sector பிரிவுகள் சேர்க்கப்பட்டுளள்ளது.

போட்டியைத் தாண்டி இது யாழ்ப்பாணத்திற்கும் இலங்கைக்கும் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். சர்வதேச தரத்திலான போட்டி அனுபவத்தை நாட்டிற்கு கொண்டு வருவது உள்ளூர் திறமையாளர்களை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்துவது என்பன இதன் குறிக்கோளாக காணப்படுகின்றது.
இப்போட்டியின் பரிசளிப்பு வைபவம் டிசம்பர் 7 ஆம் தேதி மாலை நடைபெறும்.
பண்பாட்டு பெருமை மிக்க யாழ்ப்பாணத்தில், உலகத் தரத்திலான சதுரங்கத்தை வெளிப்படுத்தும் இந்தப் போட்டி இலங்கை சதுரங்க வரலாற்றில் புதிய மைல்கல்லாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



