கமாஸ் இயக்கம், இஸ்ரேல் இராணுவத்தை நோக்கி தாக்குதல் நடத்தியதால், தெற்கு காசாவில் இஸ்ரேல் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பிபிசி ஆங்கில செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிபிசி ஆங்கில செய்தி சேவை தெரிவித்துள்ளது.
தெற்கு நகரமான ரஃபாவில் நடந்த தாக்குதல் “போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுவதாக” இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது. தீவிரமான பதிலடி கொடுப்பதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதேவேளை, “ரஃபா பகுதியில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகள் அல்லது மோதல்கள் குறித்தும் தங்களுக்குத் தெரியாது எனவும், இவை ஆக்கிரமிப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள “சிவப்பு மண்டலங்கள்” (Red Zones) என்று ஹமாஸ் பதிலுக்கு குறறம் சுமத்தியுள்ளது.
காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தின் ஒரு பகுதியான போர் நிறுத்த ஒப்பந்தம், ஒக்டோபர் 10 ஆம் திகதி அமலுக்கு வந்தது.
அதேவேளை, இத் தாக்குதின் பின்னர், இஸ்ரேல் – கமாஸ் போர் நிறுத்தம் தற்காலிகமானது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென அறிவித்துள்ளார்.
இதனால் காசாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ரூடே என்ற ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதியும் கமாஸ் இயக்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் கொல்லப்படுவதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்றும், கமாஸ் இயக்கம் தாக்கல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்ததுக்கும் காசாவில் அமைதி ஏற்படவும், டொனால்ட் ரட்ம்ப் பெரும் முயற்சி எடுத்திருந்தார். எகிப்து நாட்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, இஸ்ரேல் – கமாஸ் மோதல் எதிர்காலத்தில் நிகழாது எனவும் ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் – பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் மாறி மாறி கமாஸ் இயக்கத்தை அச்சுறுத்தும் தொனியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு வருவதால் காசாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க – இஸ்ரேல் தலைவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கேள்விக்கு உள்ளாக்கும் முறையில் கமாஸ் இயக்கம் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாதென பலஸ்தீன ஊடகங்கள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
போர் பதற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் பெற்ற இரண்டு பெரிய அரசுகள், காமஸ் இயக்கம் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தி பலஸ்தீன விடுதலைக்கு அச்சறுத்தல் விடுவதாக பலஸ்தீன ஊடகங்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.
சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் ஹமாஸ் இயக்கம், கைது செய்து தடுத்து வைத்திருந்த 20 பேரை விடுதலை செய்துள்ளது. இஸ்ரேல் 2,000 கைதிகளையும் விடுவித்திருந்தது.
ஆனாலும், கமாஸ் இயக்கத்தை நிரந்தரமாக அழிக்க வேண்டும் என்றும் அதன் பின்னரே பலஸ்தீனத்தில் அமைதி ஏற்படும் எனவும் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகு சர்வதேச ஊடகங்களுக்கு கூறுவதை நிறுத்த வேண்டும் என்ற தொனியில் கமாஸ் இயக்கமும் தமது தரப்பு வியாக்கியனத்தை ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றது.
அதேவேளை, காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை கமாஸ் இயக்கம் மீறி, காசா மக்களின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் அமெரிக்க உளவுத்துறையின் இந்த அறிக்கை தமக்கு எதிரான கட்டுக் கதை என்றும், வேண்டுமென்றே கமாஸ் இயக்கச் செயற்பாடுகளை அவமானப்படுத்துவதாகவும் கமாஸ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.