Friday, November 14, 2025 10:30 am
பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தாக அமெரிக்காவின் வோசிங்டன் போஸ்ட் (washingtonpost) செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல், அதற்கு முதல் நாள் இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு அருகில் நடக்கவிருந்த தாக்குதல், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் செயல் என்று அமைச்சர் மொஹ்சின் நக்வி, உறுதியாகக் கூறினார்.
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான் நிர்வாகம் ஆதரவளிப்பதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆப்கானிஸ்தான் தலிபான், அதன் பிரதேசத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ்-கேபி (ISIS-KP) தீவிரவாதிகளைபாகிஸ்தான் ஆதரிப்பதாக குற்றம் சாட்டியது. ஆனால் பாகிஸ்தான் அதனை மறுத்திருந்தது.
ஐஎஸ்ஐஎஸ்-கேபிக்கு எதிரான நடவடிக்கைகளின் போது பல சந்தர்ப்பங்களில், பாகிஸ்தான் பிரஜைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அல்லது கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று ஆப்கானிஸ்தான் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தானிய தேசமும் அப்படி நடந்து கொள்கிறது அல்லது பாகிஸ்தான் அரசாங்கம் பொறுப்பு என்று அர்த்தம் இல்லை எனவும் முஜாஹித் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் உறவுகள் கடந்த சில வருடங்களாக மோசமாகி வருகின்றன. கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த எல்லை மோதலில் பல இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள மற்ற தீவிரவாதிகள் இந்தியாவால் ஆதரிக்கப்படுவதாக இஸ்லாமாபாத் கூறுகிறது, ஆனால் இக் குற்றச்சாட்டை புதுடில்லி மறுத்துள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் பல தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் செல்வாக்கிற்காக போட்டியிட்டன, ஒரு நிலையற்ற, ஆனால் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாடு இரண்டும் தங்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
பாகிஸ்தானிய தாலிபான், அல்லது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், அரசாங்கத்தை தூக்கி எறிந்து, அதற்குப் பதிலாகத் தங்கள் சொந்த இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வரும் முயற்சியில் 2007 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போரை நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம், மிகச் சமீபகாலமாக இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணி வருகின்றது. இதனால் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமிய தீவிரவாத இயங்கங்களுக்கு இந்தியா மறைமுக ஆதரவு வழங்கி வருவதாக குற்றம் சுமத்தி வருகின்றது.
இப் பின்னணியில், அமெரிக்க, புதுடில்லியில் இடம்பெற்ற வாகன வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஆதரவாளிப்பதாக கூறியுள்ளமை, பாகிஸ்தான் அரசுக்கு மேலும் கோபத்தை தூண்டியிருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

