Thursday, November 13, 2025 9:50 pm
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் அங்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிக்கெட் போட்டிகளில் பங்கொள்ள பாதுகாப்பு இல்லை என இலங்கை கிறிக்கெட் விர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கியுள்ளது என்றும் இதனால் அங்கு நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கு கொள்ளுமாறும் இலங்கை கிறிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் இலங்கைக் கிறிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகள் பாகிஸ்தான் கிறிக்கெட் சபையுடன் நடத்திய உரையாடலில் இலங்கை வீரர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக் கிறிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு உத்தரவாதத்தை மதிக்காமல் இலங்கைக் கிறிக்கெட் வீரர்கள் சிலர் மீண்டும் இலங்கைக்குச் சென்றால் அவர்களுடைய செயற்பாடுகள் பற்றி மீள் மதிப்பாய்வு செய்யப்படும் என எச்சரிக்கை தொனியில் அந்த அறிக்கை அமைந்துள்ளது.
பாதுகாப்பு உத்தரவதத்தையும் மீறி சில வீரர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பினால் அந்த வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்கள் இலங்கையில் இருந்து அழைக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகக் குறைந்தது எட்டு கிறிக்கெட் வீரர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப விரும்பம் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை பாகிஸ்தான் – இலங்கை என்ற இராஜதந்திர உறவின் அடிப்படையில் பாகிஸதானில் நடைபெறவுள்ள போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், பாகிஸ்தான் அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் கொழும்பிலுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர். இதன் காரணமாக இலங்கை வீரர்கள் தமது பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிறிக்கெட் வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனால் சில வீரர்கள் காயமடைந்திருந்தனர்.
ஆகவே இந்த பயங்கர அனுபவத்தின் பிரகாரம் இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பினால் அங்கு கிறிக்கெட் போட்டியில் விளையாட சென்ற இலங்கை கிறிக்கெட் வீரர்கள் சிலர் அச்சமடைந்துள்ளனர். இலங்கையில் வாழும் அவர்களின் உறவினர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று வியாழக்கிழமை ராவல்பிண்டியில் நடைபெறவிருந்தது.
ஆனால் அப் போட்டி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15 ஆம் திகதி நடைபெற இருந்த மூன்றாவது போட்டி டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறும்.
முதல் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றதுஇ அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

