Monday, January 5, 2026 4:38 pm
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நட்சத்திர வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டதால் பங்களாதேஷில் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பு செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2026ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து முஸ்தபிசூர் ரஹ்மானை விடுவிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பணித்துள்ளது.
இதற்கான சரியான காரணங்கள் எதனையும் இந்தியா வழங்கவில்லை என பங்களாதேஷ் கருத்து வெளியிட்டுள்ளது.
“இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இந்த முடிவு பங்களாதேஷ் மக்களைப் புண்படுத்தியுள்ளது. இதனால் மறு அறிவித்தல் வரும் வரை இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்துமாறு உத்தரவிடப்படுகிறது” என பங்களாதேஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பெப்ரவரி 7ம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்காகத் தமது தேசிய அணியை இந்தியாவுக்கு அனுப்பப் போவதில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் உத்தியோகப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அத்துடன் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த தமது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு மற்றும் இரு தரப்பு நம்பிக்கையின்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

