Monday, November 10, 2025 9:43 am
நல்லூர் இளங்கலைஞர் மன்றத்துக்கு இடைக்கால நிர்வாகம்!
யாழ்ப்பாணம் – நல்லூர் இளங்கலைஞர் மன்றத்திற்கு இடைகால நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
ஈழத்தின் மூத்த இசைக் கலைஞர் பொன்.சுந்தரலிங்கம் தலைமையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நல்லூரில் தொடங்கப்பட்ட இளங்கலைஞர் மன்றம் பத்தாண்டுகளுக்கு மேலாக புதிய நிர்வாக மாற்றமின்றிக் காணப்பட்டது.
அதன் முக்கிய உறுப்பினர்கள் சிலர் மன்றச் செயற்பாடுகளுக்கு ஒத்திசைவாகச் செயற்படவில்லை என்று நிறுவுநர் உட்பட்ட மூத்தவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு அமைய மன்றத்தின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தான் பதவி விலகுவதாக நிறுவுநருக்கு அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் கடந்த எட்டு மாதங்களாக நிறுவுநரால் முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் மன்றச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், இளங்கலைஞர் மன்றக் காப்பாளர்களில் ஒருவரான ஆறு திருமுருகன் தலைமையில் நிர்வாக மாற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில்,
நேற்று (09-11-2025) இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் புதிய இடைக்கால நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.
தலைவராக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரதேச செயலரும் கவிஞருமான த.ஜெயசீலன், செயலாளராக யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவரையாளர் இ.சர்வேஸ்வரா, பொருளாளராக மூத்த கணக்காளர் க.மகாலிங்கம் ஆகியோரும் உப தலைவராக யாழ்.பரியோவான் கல்லூரி ஆசிரியரும் மிருதங்கக் கலைஞருமான சி.செந்தூரனும் உப செயலாளராக திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலைய பிரதி விவசாயப் பணிப்பாளரும் குரலிசைக் கலைஞருமான அ.அமிர்தலோஜனனும் தெரிவு செய்யப்பட்டனர்.
அதேவேளை செயற்குழுவில் 20 பேர் உறுப்பினர்களாகவும் யாப்பு சீரமைப்புக் குழுவிற்கு ஆறு பேரும் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் பரத நாட்டியம், குரலிசை, மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் உட்பட்ட வகுப்புக்கள் இலவசமாக நடைபெற்றுவருகின்றன.
அதேவேளை மன்ற மண்டபத்தில் மாதாந்த கலை அரங்கும், நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நல்லூர் முருகன் பெருந்திருவிழாகாலத்தில் உற்சவகால நாளாந்த இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளையும் நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

