Friday, October 31, 2025 4:06 pm
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் சட்டத்தரணி ஒருவர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். குறித்த சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்யப்பட்டது.
இவர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான ‘தருன்’ என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயல்பட்டதாகவும்,கெஹெல்பத்தர பத்மேவின் வழக்குகளில் முன்பு ஆஜராகியிருப்பதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு தீட்டப்பட்ட திட்டத்தில், துப்பாக்கியை மறைப்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டு பிரதிகளை இஷாரா செவ்வந்திக்கு இந்த சட்டத்தரணியே வழங்கியமை தெரிய வந்துள்ளது.
அத்துடன் இந்த சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கு போலி சட்டத்தரணி அடையாள அட்டை, சட்டத்தரணிகளுக்கான வாகன நுழைவு அனுமதி மற்றும் இரண்டு சட்டத்தரணி டைகளையும் வழங்கியது தெரிய வந்துள்ளது.
அதன்படி, அவரது வங்கிக் கணக்குகளை விசாரித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரது தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சந்தேக நபர் ஜூன் மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கும் பின்னர் டுபாய்க்கும் பயணம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், விசாரணை அதிகாரிகள் கூறுகையில், சந்தேக நபரான சட்டத்தரணி தனது வசிப்பிடத்தை மாற்றி, வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார்.


